ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம். ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது. திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான். ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர் ‘உகந்து தோழன் நீ எனக்...