செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது. 'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது. ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்...